தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி மற்றும் அதனை ஒட்டி உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய தொழிலோடு இணைந்து ஆடு வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக வனப்பகுதியில் ஆடு மேய்க்க பென்னாகரம் வனத்துறை அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆடி மாதத்தில் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாயும் வருடப் பிறப்பான ஜனவரி மாதத்தில் ஆயிரம் ரூபாயும் எனக் கணக்கிட்டு வனத்துறை ஊழியர்கள் பணம் கேட்பதாகவும் பணம் தர மறுத்தால் அபராதம் விதிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கோடுபட்டியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் கூறியதாவது; “எங்கள் கிராமத்தில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். ஆடு மாடு மேய்ப்பது தொழில். அதனுடன் சுண்டைக்காய் சேகரித்தல் போன்ற வேலைகளைச் செய்து வருகின்றோம். அரசு காடுகளில் விறகு பொறுக்கலாம் ஆடு மாடு மேய்க்கலாம் என்று கூறி வருகிறது.
தற்பொழுது வனத்துறையினர் காடுகளில் ஆடு மாடு மேய்க்கக் கூடாது, சுண்டக்காய் பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மிரட்டி வருகின்றனர். ஆடு மேய்த்தாலும் மாடு மேய்த்தாலும் அபராதம் விதிக்கின்றனர். வனத்திலிருந்து கிராமத்திற்குள் நுழையும் வனவிலங்குகள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்தாலும் அவர்களுக்கு அது கணக்காகத் தெரிவதில்லை. நாங்கள் வனத்திற்குள் சென்றால் உடனடியாக அபராதம் விதிக்கிறார்கள்” என வேதனை தெரிவித்தார்.
தாசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் பேசும்போது; “ஆடி மாதத்தில் ஒரு ஆட்டுக்கு 300 ரூபாய் மாமூல் தர வேண்டும். குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் ஜனவரி மாதத்தில் தர வேண்டும். ரேஞ்சருக்கு மோதிரம் வழங்க வேண்டும் என வசூலிக்கின்றனர். பணம் தர மறுத்தால் துப்பாக்கி வழக்கு போன்ற பொய் வழக்குகளைப் போடுவதாக மிரட்டுகிறார்கள். தொந்தரவு செய்கிறார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினோம்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியதால் 27 ஆம் தேதி முதல் மாடு ஒன்றுக்கு மூன்று ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்தைச் சேதப்படுத்த வரும் யானை, மயில், பன்றி போன்ற வன விலங்குகளை வனத்துறையினர் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஆடு மாடுகள் மேய்க்க வனப்பகுதிக்குள் செல்வதில்லை என்றும், இல்லையென்றால் நாங்கள் ஆடு மாடுகள் மேய்ப்பதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தருமபுரி டி.எஃப்.ஓ. அப்பலோ நாயுடுவை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அந்தப் பகுதி மக்கள் விவசாயிகள் கால்நடை மேய்ப்பதாகக் கூறி காட்டிற்குள் சென்று அங்கிருக்கும் மரம் செடி கொடிகளை வெட்டி விட்டி காட்டை சமப்படுத்தி விவசாயம் செய்கின்றனர். அதனால் காட்டு விலங்கிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி காட்டை ஆக்கிரமிப்பதால், வனவிலங்குகள் இருப்பிடத்தை தேடி ஊருக்குள் வந்துவிடுகிறது. அதனால் தான் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மற்றபடி அரசு காட்டிற்குள் செல்ல அவர்களுக்கு அளித்திருக்கும் அனுமதியை நாங்கள் தடுப்பதில்லை. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக எனக்கும் புகார் வந்தது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.