ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர் போக்குவரத்து பணிமனையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு மேட்டூர் சாலையில் போக்குவரத்து போலீசார் நின்று சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, மதிவாணன் செல்போன் பேசியபடி வந்துள்ளார்.
இதையடுத்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகனத்தை நிறுத்தி அவரை சோதனை செய்தார். அதில், மதிவாணன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அப்போது திடீரென ஓய்வுபெற்ற ராணுவ வீரர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு போலீசார் போதையில் வாகனம் ஓட்டுவதாகக் கூறி வழக்குப்பதிவு செய்வதாகவும், இதனைக் கேட்டதற்கு போக்குவரத்து போலீசார் தாக்குதல் நடத்துவதாகக் கூறியும் இதனை இணையதளத்தில் பதிவு செய்யச்சொல்லி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் சாலையில் சென்ற நபர் ஒருவர் அவரை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினார். இதன் பின்னர் போக்குவரத்து போலீசார் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மதுபோதையில் செய்த ரகளையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.