Skip to main content

“ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெருமிதம்!

Published on 20/01/2025 | Edited on 20/01/2025
Resolved 12.80 lakh petitions in one year Minister KKSSR Ramachandran Pride

அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளதாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் சேவைகளை பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலையிலிருந்து அரசின் சேவைகள் மக்களிடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொலை நோக்கு திட்டமான மக்களுடன் முதல்வர் திட்டத்தை 2023ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற 44 அடிப்படைப் பொதுசேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் முக்கியச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக நகர்புறங்களில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு, மக்களின் அரசு, அவற்றையும் தாண்டி மக்களிடம் இறங்கி வந்து சேவையாற்றும் மாண்புடைய அரசு என்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலில் தொடங்கப்பட்ட 'மக்களுடன் முதல்வர் திட்டம் மிகச்சிறந்த சான்றாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்