Skip to main content

சரக்கு பெட்டக மாற்று முனையத்துக்கு எதிர்ப்பு..! குமரி மீனவர்கள் கடல் முற்றுகை போராட்டம்..! (படங்கள்)

Published on 07/04/2018 | Edited on 07/04/2018


மத்திய அரசின் சரக்கு பெட்டக மாற்று முனையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மீனவர்கள் கடலுக்குள் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் இணையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்து அதற்கான பூர்வாக பணிகளை மத்திய அரசு செய்து வந்தது. இதற்காக கருங்கல் அருகே தொலையாவட்டத்தில் அலுவலகமும் திறக்கப்பட்டு தனி அலுவலரும் நியாமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒர் ஆண்டாக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்ததால் மத்திய அரசு அந்த திட்டத்தை திடீரென்று அங்கிருந்து கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்துக்கு இடமாற்றம் செய்தது. இதற்கு அந்த பகுதி மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இங்கு சரக்கு பெட்டக மாற்று முனையம் வந்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு இயற்கை வளங்களும் அழிக்கப்படும்.

மேலும் 500 மீட்டர் சுற்றளவுக்கு கடலை கருங்கற்களால் நிரப்ப பல கி.மீ தூரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையையும் உடைக்கப்படும். அது போல் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் அப்புறப்படுத்தபடும் என மீனவர்கள் குற்றம்சாட்டி கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்ங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சரக்கு பெட்டக மாற்று முனையத்தை எதிர்த்து போராடும் மீனவர்களுக்கு எதிராக சரக்கு பெட்டக மாற்று முனையம் ஆதரவு இயக்கம் என்று பா.ஜ.க வினர் தொடங்கி மீனவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மீனவர்களும் பா.ஜ.க வினரும் போட்டி போராட்டங்களை நடத்தி போலிசாருக்கு தலைவலியை உண்டாக்கினார்கள்.

இந்தநிலையில் மீனவர்கள் போராட்டத்தை வேகமெடுக்கும் நிலையில் இன்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தை ஐம்பதாயிரம் பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு போலீசும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரக்கு பெட்டக மாற்று முனைய திட்ட பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் இன்று குமரி மாவட்டத்தில் முமு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதே தொடர்ந்து நேற்று மூவாயிரம் போலிசார் பாதுகாப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் இரு தரப்பினரையும் போலிசார் அழைத்து பேசியதன் அடிப்படையில் பா.ஜ.க முமு அடைப்பு போராட்டத்தை ரத்து செய்தது. அது போல் போலீசார் கேட்டு கொண்டதன் பேரில் மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பதில் கோவளம் மற்றும் மணக்குடியில் கடலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராம மக்களும் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கடலில் படகில் நின்றபடியே கறுப்பு கொடி கட்டி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல் பெண்களும் குழந்தைகளும் கடற்கரையில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருப்பதுடன் போலீசாரும் குவிக்கபட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்