மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவிலிருந்து கரையைக் கடக்கத் துவங்கியது. கடக்கும் போது மழையுடன் கூடிய சூறாவளி காற்று மிக பலமாக வீசியது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் வீசிய சூறாவளி காற்றால் கடல் அலை கொந்தளிப்பில் கடற்கரையைக் கடந்து கடலோரத்தில் உள்ள குடியிருப்புகளிலும் கடல் நீர் உள்ளே புகுந்தது. கடற்கரையின் பகுதிகள் பாதியளவு காணாமல் போயிருந்தன. அந்தளவுக்கு கடல் நீர் கரையை அரித்தெடுத்திருக்கிறது.
வீசிய சூறாவளி காற்றினால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்து சாலைகளை ஆக்கிரமித்திருந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து விடிய விடிய மாநகராட்சி பணியாளர்களும், பேரிடர் மேலாண்மை துறையினரும் சாலைகளை ஆக்கிரமித்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதனால் காலையில் போக்குவரத்து மிகச் சீராக இருந்தது. எந்த பாதிப்பும் இல்லை. அரசு துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியதாக இருந்தது. இதனையறிந்து, அதிகாரிகளை வெகுவாகப் பாராட்டினார் மு.க.ஸ்டாலின்.
மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் 23 மாவட்டங்களிலும் மக்களுக்கு அச்சமின்றி இருக்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்கவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிட மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் உயரதிகாரிகளுடன் விவாதித்து உத்தரவிட்டபடி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். விடிய விடிய கண்விழித்து ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வருகிற தகவல்களின் அடிப்படையில், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ஏற்பாடுகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியபடி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் விடியற்காலை 4 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சொல்ல, அந்த நேரத்திலிருந்தே பம்பரமாய் சுழன்றிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள திமுக நிர்வாகிகளை அமைச்சர்கள் முடுக்கிவிட, அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கான நிவாரண உதவிகள் உடனுக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காலையிலேயே ஆய்வு செய்ததுடன் நிவாரண உதவிகளையும் வழங்கினார் மு.க.ஸ்டாலின். புயலும் மழையும் சற்று ஓய்வெடுத்த நிலையில், மக்களைச் சந்திக்க வந்த முதல்வரை வியப்புடன் பார்த்தனர் சென்னைவாசிகள்.