சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கோபிநாத். இவர், காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, PEW ஆய்வாளரின் ஜீப் ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் மயங்கி விழுந்த ஜீப் ஓட்டுநரை எழுப்ப முயன்று, அவர் அருகில் சென்றுள்ளனர். அப்போதுதான், ஜீப் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
உடனே, சமயோசிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கோபிநாத் வலிப்பு ஏற்பட்ட ஜீப் ஓட்டுநரைப் பார்த்துப் பதற்றப்படாமல் அவரின் அருகே சென்று முதலுதவி செய்தார். பொதுவாக வலிப்பு ஏற்பட்டால் கையில் இரும்பு கொடுக்க வேண்டும் என்று கூறுவர். ஆனால், அதுவும் மூட நம்பிக்கை என்று கூறும் மருத்துவர்கள் அப்படிச் செய்தால், அதனால் நோயாளிக்குக் காயம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கின்றனர்.
இதையறிந்து செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் ஜீப் ஓட்டுநருக்குத் தேவையான முதலுதவியை அளித்தார். மேலும், வலிப்பு ஏற்படும்போது உடலில் அதிதீவிர செயல்பாடு இருக்கும் என்பதால், ஜீப் ஓட்டுநரின் அருகிலே இருந்த காவல் உதவியாளர் அவர் மயங்கி விழுந்த இடத்தில் உடலில் காயம் ஏற்படாதவாறு பாதுகாப்பு அரணாக இருந்தார். அத்துடன், மருத்துவர்கள் கூறுவது போலவே வலிப்பு தொடங்கி முடியும் வரை நோயாளியான ஜீப் ஓட்டுநரின் அருகிலேயே இருந்தார். இதையடுத்து, வலிப்பு முடிந்த பிறகு மக்கம் தெளிந்து எழுந்த ஜீப் ஓட்டுநருக்கு உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் சோனை ஆகிய இருவரும் தட்டிக்கொடுத்துத் திடப்படுத்தினர்.
தொடர்ந்து, தண்ணீர் கொடுத்து ஜீப் ஓட்டுநரை ஆசுவாசப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, உதவி ஆய்வாளர்கள் இருவர் வலிப்பு ஏற்பட்ட ஜீப் ஓட்டுநருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.