விழுப்புரம் தாலுகாவில் உள்ள திருப்பாச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் சத்யா 12ம் வகுப்பு படித்திருக்கிறார். இவரது தந்தை இறந்துவிட்டார். தாயும் சரியான விவரம் அறியாதவர். இவருக்கு யாரும் உதவி செய்வதற்கு ஆதரவு இல்லாத நிலையில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாணவி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், எனக்கு மேற்படிப்பு படிப்பதற்காக சாதி சான்று தேவைப்படுகிறது. முறைப்படி அதிகாரிகளுக்கு மனு கொடுத்து ஜாதிச் சான்று பெறுவதற்கு எனக்கு உதவி செய்ய ஆதரவு இல்லாததால், மாவட்ட ஆட்சியராகிய தங்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை படித்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக விழுப்புரம் வட்டாட்சியர் ஆனந்த குமாரை வரவழைத்து முறைப்படி சத்யாவிற்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கும் படி உத்தரவிட்டார். இதையடுத்து 30 நிமிட நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திலேயே மாணவி சத்யாவிற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் சாதி சான்றிதழ் வழங்கினார். மாணவியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.