Skip to main content

பட்டாசு ஆலை விபத்து; இருவர் உயிரிழப்பு-தொடர் கதையாகும் 'துயரம்'

Published on 14/08/2024 | Edited on 14/08/2024
Repeated fireworks accident; Two people lost their live

விருதுநகரில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக அதிகாரிகளும் பட்டாசு சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மாயத்தேவன்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. மொத்தம் 42 அறைகளை கொண்ட பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று வழக்கம்போல வேலை நடந்து கொண்டிருந்தது. கெமிக்கல் ரூமில் வெடி மருந்து தயாரிக்கும் வேதிப்பொருட்கள் வேனில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த புலிக்குட்டி, கார்த்திக் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகின்றனர். விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்