தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து ரூபாய் 6 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 14 கடலோர மாவட்டங்களில் 1.80 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக நடப்பாண்டில் மொத்தம் 108 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிவாரணத் தொகை நேரடியாக மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.9 லட்சம் மீனவ மகளிருக்கு அவர்கள் செலுத்திய பங்கு தொகையுடன் அரசு வழங்கும் நிவாரணத் தொகையான மூன்றாயிரத்தையும் சேர்த்து 4,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக அரசின் பங்குத்தொகையாக 62.80 கோடி ரூபாய்க்கு நிதி ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.