சென்னை குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை குரோம்பேட்டை ரங்கநாதர் தெருவைச் சேர்ந்த சுபலட்சுமி என்பவரது மகன் அபிஷேக் (7). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அபிஷேகிற்கு காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அபிஷேக் அனுமதிக்கப்பட்டான். தொடர் சிகிச்சையில் இருந்த சிறுவன் அபிஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் அபிஷேக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததாகவும் அப்பொழுது சிறுவன் அபிஷேக்கிற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தது என்றும் அதற்காக சிகிச்சை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் அபிஷேக்குடைய பெற்றோர் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை தாங்களே அதிகரித்துக் கொள்வதாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் சிறுவன் உயிரிழந்துவிட்டான் என மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.