விழுப்புரம் அருகில் உள்ள பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் (25) என்பவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டிவருகிறார். நேற்று (03.12.2021) இரவு அர்ச்சுனன், விழுப்புரம் டவுனிலிருந்து பணாம்பட்டு ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்குச் செல்வதற்காக ஆட்டோவை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே அவரது ஆட்டோ ரோட்டைக் கடக்க முயன்றபோது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் அர்ச்சுனன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை மடக்கி நிறுத்த முயன்றனர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அச்சமடைந்து, பஸ்சை வேகமாக ஓட்டிச் சென்று விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தின் எதிரில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு பஸ்சை மறித்தும் நிற்காமல் வேகமாக ஓட்டிச் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள், அர்ச்சுனனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் ஆத்திரத்துடன் பஸ்சைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். காவல் நிலையத்தின் அருகில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவரும், நடத்துநரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதனைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், அவர்கள் இருவரையும் சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினர். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அர்ச்சுனன் உடலை அந்த இடத்திலிருந்து எடுக்கவிட மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த பஸ்சின் கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டு பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர், இருந்தும் விபத்து நடந்த அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.