
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் இல்ல திருமண விழா இன்று (30.04.2025) நடைபெற்றது. இத்திருமணத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்நிலையில் இந்த திருமண விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழியை வானதி சீனிவாசன் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கைக்குலுக்கி கொண்டனர். மேலும் சிரித்தபடியே பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நிச்சயமாக உறுதியாக நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணி அமைத்து வந்தாலும் சரி ஒரு கை பார்ப்போம்.
இந்த உணர்வோடு தான் இன்றைக்கு நம்முடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது வருமான வரித்துறையாக இருந்தாலும் சரி. அல்லது புலனாய்வுத் துறையாக இருந்தாலும் சரி. சிபிஐ என்கிற அமைப்பை வைத்து மிரட்டக் கூடியதாக இருந்தாலும் சரி. ஈ.டி. என்ற அமலாக்கத்துறையை வைத்து மிரட்டினாலும் சரி. எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏனென்றால் நாம் நெருக்கடியையே பார்த்து வளர்ந்திருக்கக் கூடியவர்கள் நாம்” எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.