'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியராக பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம்கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.
இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி வருகிறார். தாங்கள் உங்களுக்கு துணை இருக்கிறோம் என தமிழக ஆளுநரே நேரில் அவரை சந்தித்து சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அங்கு பதிவாளராக பணியாற்றி வந்த தங்கவேல் என்பவர் இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அரசு சம்பளத்தில் பணியாற்றக்கூடிய தங்கவேல் 'அப்டெக்கான் ஃபோரம்' என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் உடனடியாக அவரை பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும்; இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தற்போது வரை தங்கவேல் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.