Skip to main content

மருத்துவபடிப்பு இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் மத்திய அரசு நிலைபாட்டை தெரிவிக்க உத்தரவு!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021
Order to state the position of the Central Government in the case of medical study reservation

 

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகக் குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண்டும் என உத்தரவிட்டது. 

 

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனப் பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைக் காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-22ம் கல்வியாண்டில் இட ஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்தும், அதை அமல்படுத்தவில்லை எனவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் வாதிட்டார். 

 

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர், மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுவிட்டு, தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும், இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் மத்திய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு, அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்