இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் இயல்பை விட அதிக அளவு பெய்துள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை தொடரும். கன்னியாகுமரி, திருச்சி, ஈரோட்டில் வடகிழக்குப் பருவமழை குறைவாகப் பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% அதிகமாக பதிவாகியுள்ளது. 2020-ஆம் ஆண்டில் 946 மி.மீ.க்கு பதிலாக 984 மி.மீ. மழை பதிவானது; இது இயல்பை விட 4% அதிகம். அதேபோல் தென்மேற்குப் பருவமழை 342 மி.மீ.க்கு பதில் 421 மி.மீ. பதிவானது; இது இயல்பை விட 24% அதிகம். வடகிழக்குப் பருவமழை 449.7 மி.மீ.க்கு பதில் 477 மி.மீ. என்று பதிவானது; இது இயல்பை விட 6% அதிகம்" என்றார்.