Skip to main content

திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவல் 4 நாட்களாக குறைப்பு!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
Reduction of police custody of thanikachalam by 4 days

 

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தின் 6 நாள் போலீஸ் காவலை, 4 நாட்களாகக் குறைத்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், முதல்வர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளில் 2 பேரை குணப்படுத்தியதாகவும், முதல்வர் மற்றும் உலக சுகாதார நிறுவனம்  குறித்து தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக,  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையை நடத்தி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவருக்கு எதிராக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் மே 6-ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து, எழும்பூர் சிறையில் ஆஜர்படுத்திய நிலையில்,  மே 20  வரை நீதிமன்ற காவலில், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 


ஜாமீன் கோரிய திருத்தணிகாசலத்தின் மனு மற்றும் 7 நாள் போலீஸ் காவல் கோரிய மத்திய குற்றப்பிரிவு மனுக்களை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 6 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து திருத்தணிகாசலம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, திருத்தணிகாசலம் கைதால் எந்த பதற்றமான சூழலோ, சமூகத்தில் தாக்கமோ ஏற்படாதபோது அவரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமற்றது என்றும், முறையாக நோட்டீஸ் அனுப்பாமல் கைது செய்துள்ளதாக மூத்த வக்கீல் பிரபாகரன் வாதிட்டார். ஆனால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் போலீஸ் காவலை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

 


இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 6 நாள் காவல் என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவை, 4 நாட்களாகக் குறைத்து உத்தரவிட்டார். மேலும், போலீஸ் காவல் முடிந்து மே 16-ல் ஆஜர்படுத்தும்போதே, அவரது ஜாமீன் மனுவை விசாரித்து,  தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென எழும்பூர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்