சென்னை கோயம்பேட்டில் பட்டதாரி இளைஞர் ஒருவர் பயணி ஒருவரின் சூட்கேஸை லாவகமாக திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த வடிவேல் என்பவர் குடும்பத்தினருடன் துறையூர் செல்ல சென்னை கோயம்பேட்டில் பேருந்து ஏறியுள்ளார். அப்போது லக்கேஜ் வைக்கும் இடத்தில் சிவப்பு சூட்கேஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில் 16 சவரன் நகை இருந்துள்ளது. சூட்கேஸை வைத்துவிட்டு வடிவேல் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கிச் சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்த பொழுது சிவப்பு நிற சூட்கேஸை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேல் உடனடியாக அங்கு இருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் சூட்கேஸை தூக்கிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக மூன்று குழுக்களாக பிரிந்த போலீசார் அந்த இளைஞரைத் தேடினர். ஆட்டோ மூலம் கத்திப்பாராவுக்கு சென்ற அந்த இளைஞர் அங்கு டி-ஷர்டை மாற்றிக் கொண்டு சிவகங்கை செல்லும் பேருந்தில் ஏறித் தப்பிக்க முயன்ற நிலையில் போலீசார் அவரை பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் சிவகங்கையைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி சுந்தரலிங்கம் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.