கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது அதிமுகதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''இன்று என்.சி.பி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை ஒரு பெரிய அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியதாக 25ஆம் தேதி டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் தேடப்பட்டு வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்திருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமானது.
இந்த கடத்தலில் திமுகவுடைய சென்னை மேற்கு மாவட்ட அலுவலக அணியின் உடைய துணை அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தான் மூளையாக செயல்பட்டதாகவும், அவர்களுடைய சகோதரர் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் இணைந்து இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது என வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வந்து கொண்டிருக்கிறது.
இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது மக்கள் மத்தியில் நாம் விட்டுவிடுகிறோம். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நிறைய பேசுகிறார். அதை எல்லாம் எடிட் பண்ணி விடுகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது நாம தான். ஆனால் அதிக பேருந்துகள் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உடனடியாக நிறைவேற்றவில்லை. அதற்கான வசதிகளை எல்லாம் செய்த பிறகு தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் இவர்கள் வேக வேகமாக பஸ் நிலையத்தை திறந்து கலைஞருடைய பேருந்து நிலையம் என பெயர் வைக்கிறார்கள். திமுக ஒரு திராவிட இயக்கத்தின் மாடல் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் எங்கே எடுத்தாலும் மதுரையில் நூலகத்திற்கு கலைஞர் பெயர், ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் என எல்லாவற்றுக்கும் கலைஞர் பெயர் வைக்கிறார்கள். ஏன் அண்ணாவுடைய பெயரை வைக்கலாமா அல்லவா? இந்த அரசாங்கம் செய்ததா?' என்றார்.