கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் காரணம் குறித்து மணமேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக பிரமுகர் இல்லத்திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்த அவர் திருமண நிகழ்வுக்குப் பின் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அறிவித்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி விட்டோம் என்ற தவறான கருத்தை பதிவு செய்ய நான் விரும்பவில்லை. நிறைவேற்றப்படாமல் மிச்சம் இருக்கக்கூடிய திட்டங்களையும் விரைவில் நிறைவேற்றக்கூடிய ஆட்சியாகத் தான் இந்த ஆட்சி இருக்கிறது. அதற்கு காரணம் இன்று முதல்வராக பதவியை வைத்திருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு என்று தனிப்பட்ட பட்ஜெட் அமைக்கப்படும் என்று சொன்னோம். ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட அடுத்த நாளே விவசாயிகளுக்கான பட்ஜெட்டை வெளியிட்டோம். இந்த ஆண்டும் நிதிநிலை அறிக்கை வெளியிட்டதற்கு அடுத்து விவசாயிகளுக்கான பட்ஜெட் வெளியிடப்பட இருக்கிறது.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அறிவித்தோம். அதன்படி தேர்தல் அறிக்கையில் நாம் என்னென்ன திட்டங்களை எல்லாம் சொல்லி இருக்கிறோமோ அந்த திட்டங்கள் எல்லாம் எந்த அளவில் நிறைவேறி இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவும், சில திட்டங்கள் நிதி பிரச்சனை காரணமாகவோ அல்லது அதிகாரிகளின் மெத்தனப்போக்கின் காரணமாகவோ முடிவடைய முடியாத சூழலில் இருந்தால், அதை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக உருவாக்கப்பட்டது தான் முதலமைச்சரின் கள ஆய்வு திட்டம்.
ஒவ்வொரு மண்டலமாக நான் சென்று கொண்டிருக்கிறேன். முதல் ஆய்வு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கியது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினேன். அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை குறித்து ஆய்வு நடத்தினேன். இரண்டாம் கட்டமாக கொங்கு மண்டலத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் என நான்கு மாவட்டங்களில் ஆய்வு நடத்தினோம். மூன்றாம் கட்டமாக மார்ச் மாதம் 5-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் ஆய்வுக்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சைக்கும் திருவாரூருக்கும் வரப்போகிறேன்” எனக் கூறினார்.