சேலத்தில் இன்று (செப். 11) மாலை முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால், வெப்பம் தணித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த இரு நாள்களாக மழைப்பொழிவு இல்லாவிட்டாலும், வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இன்று (செப். 11) பகல் நேரத்தில் வெயில் சித்திரை மாதம் கத்திரி வெயில் போல சுட்டெரித்தது. ஆனால் மாலை 5 மணியளவில் திடீரென்று வானில் கருமேகங்கள் சூழ்ந்து, இருட்டிக் கொண்டிருந்தது. பின்னர் 5.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சீரான இடைவெளியில் விட்டு விட்டு மழை பெய்தது. சில நேரம் கனமழையும் சில நேரம் மிதமான மழையும் பெய்தது. மாநகர பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் இன்னும் முடிவடையாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரவு 9.15 மணிக்கு மேல் மழையின் தீவிரம் குறைந்ததால் சாலைகளில் போக்குவரத்து வேகமெடுத்தது. இதனால், ஐந்து சாலை, சூரமங்கலம், குரங்குசாவடி, புதிய பேருந்து நிலையம், கடைவீதி, நான்கு சாலை, முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆத்தூர், கெங்கவல்லி, தெடாவூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையால் பொதுமக்கள், விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பமும் தணிந்து, இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.