Skip to main content

ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து எல்லைகளை வரையறை செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
lake

 

தமிழகம் முழுவதும்  ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்து எல்லைகளை வரையறை செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டம் கடந்த 2007ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை  அளவீடு செய்து அது சம்பந்தமான பதிவேடுகளை தயாரிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்துள்ளது.

 

சட்டமியற்றபட்டு 10 ஆண்டுகளாகியும் இந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டி, ஏரிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரி மாற்றம் இந்தியா இயக்குனர் ஏ.நாராயணன் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில், 2017- 2018ஆம் ஆண்டு அரசு கொள்கை குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 39,202 ஏரிகளில் பெரும்பாலானவை அளவீடு செய்யப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், இளந்திரையன் ஆகியோர் வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
 

சார்ந்த செய்திகள்