சீமான் உள்ளிட்ட யார் எதிர்த்தாலும் சந்திக்க தயார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ''நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு படித்து மார்க் வாங்குகிறார்கள். அந்த மார்க் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழக முதல்வர் சொல்லிவிட்டார். கூட்டணி கட்சிகளும் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லி உள்ளார்கள். விஜய் கூட சொல்லி இருக்கிறார். நீட் தேர்வை ஆரம்ப காலத்தில் இருந்தே நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லா மாநிலங்களும் இப்பொழுது தான் சொல்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்ததே நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். காரணம் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் எல்லாம் வர முடியாது என்பதற்காக சொல்கிறோம். அது இப்பொழுது உண்மை என நிரூபணமாகி வருகிறது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், பாமகவினர் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்து வாக்குகள் கேட்பது குறித்த கேள்விக்கு, ''மற்ற கட்சிகள் விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. அண்ணா திராவிட இயக்கத்தை கொட்டுகின்ற மலையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கிய பொழுது உதயசூரியன் சின்னத்தை கண்டெடுத்தார். கலைஞர் அதைக் காப்பாற்றி வைத்திருந்தார். அதை மு.க.ஸ்டாலின் வழிநடத்திச் செல்கிறார். அந்த அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடப்பதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை போட வேண்டும் என்று நாங்கள் கேட்கப் போகின்றோம். தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற விஷயங்களை பேசுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. யார் மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட போகிறார்கள்.
'சீமான் தங்களுடைய எதிரி கட்சி திமுகதான்' என பிரச்சாரத்தில் பேசி வருகிறாரே' என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, ''அவர் சொல்லிக் கொண்டுபோகிறார் அது அவருடைய இஷ்டம். எங்களை எதிர்க்காதவர்கள் யார் இருக்கிறார்கள். அவரவர்கள் கட்சி அவரவர்களுக்கு பெருசு. நல்லா சொல்லிட்டு போறாரு. நல்லா எதிர்த்துட்டு போறாரு. நாங்க என்னாங்கிறோம். நாங்க தயாராக இருக்கிறோம் எதையும் சந்திப்பதற்கு. உதயசூரியனுக்கு ஓட்டு போடணும் அவ்வளவுதான்''என்றார்.