சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஓய்வுபெற்றார். அதனால், நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆகக் குறைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011-ல் நியமிக்கப்பட்ட நீதிபதி ரவிசந்திரபாபு, நேற்றுடன் பணி ஓய்வு பெற்றுள்ளார். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, காணொலியில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி, உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீதிபதி ரவிச்சந்திரபாபு குறித்த சிறப்புரையை, தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாசித்தார்.
பின்னர், ஏற்புரையாற்றிய நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, “கடந்த 9 ஆண்டுகளாக உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தற்போது, இளம் வழக்கறிஞர்கள் பலர் நல்ல முறையில் நீதிமன்றத்தில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்குகள் தொடர்பாக நிறைய படிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். என்னுடைய பணிக்காலத்தில், எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி.” என்றார் நெகிழ்ச்சியுடன். நீதிபதி ரவிச்சந்திரபாபு பணி ஓய்வு பெறுவதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 53 ஆகக் குறைந்து, காலியிடங்கள் 22 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும்.