தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ குடும்ப அட்டைகளை நவீனப்படுத்தி மக்களுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும் என்பதால்தான் பி.ஓ.எஸ் என்ற நவீன இயந்திரம் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்பட்டது. அடுத்து ஸ்மார்ட் கார்டு நடைமுறையும், முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறைகளும் கொண்டுவரப்பட்டன. ஆனால், நவீன மயமாக்கல் பணி அதோடு முடிந்துவிட்டதாக அரசின் நிலை உள்ளது.
விளம்பரம் மட்டுமே செய்தார்களே தவிர நவீன இயந்திரங்களின் பயன்பாட்டிற்கான முறையான வசதிகளை உருவாக்கித் தரவில்லை. நவீன முறை வருவதற்கு முன் ஐந்து நிமிடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பி.ஓ.எஸ் கருவியில் சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளதால் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். எனவே பி.ஓ.எஸ். இயந்திரத்தில் 4ஜி சிம் பொருத்த வேண்டும். எலக்ட்ரானிக் இயந்திரத்தில் சிக்னல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
நுகர்வோருக்கு பொருட்கள் வழங்கப்பட்ட பிறகு பின்புறத்தில் பொருட்கள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஓ.எஸ் இயந்திரங்களை மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கடை பணியாளர்கள் வரும் 26-ஆம் தேதி ஒப்படைப்பார்கள்” என்றார்.