
திருமணத்தைப் பயன்படுத்தி இந்து சமூகத்தினரை, மற்ற சமூகத்தினர் கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அவ்வாறு கட்டாயம் மத மாற்றங்கள் செய்பவர்களை ‘லவ் ஜிகாத்’ என்று பா.ஜ.க பொதுவாக அழைத்து வருகிறது. லவ் ஜிகாத்தை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், லவ் ஜிகாத்தை நிறுத்த கிறிஸ்துவப் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் வைக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கேரளா பா.ஜ.க தலைவர் பி.சி.ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கிறிஸ்தவ குடும்பங்கள் தங்கள் மகள்களை 22 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்க வேண்டும். மீனாச்சில் தாலுகாவில் மட்டும், 400 பெண்கள் லவ் ஜிகாத்திற்கு பலியாயினர். எத்தனை பேரை மீண்டும் அழைத்து வர முடியும்? வெறும் 41 பேர் மட்டுமே.
நேற்று கூட, பரங்கங்கணத்தில் ஒரு பெண் காணாமல் போனார். அவருக்கு 25 வயது. குடும்பத்தினர் இன்னும் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரை சீக்கிரமாக திருமணம் செய்து வைக்காத அவருடைய தந்தையை நாம் அறைய வேண்டாமா? பெண்கள் 18 வயதை அடையும் போது திருமணம் செய்து வைத்து, அதிகபட்சம் 22 வயது வரை மட்டுமே வைத்திருக்க பெற்றோர்கள் கண்ணியத்தைக் காட்ட வேண்டாமா?.
25 வயதில், ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகிறார்கள். இது உண்மை. இது மனித பலவீனம். முஸ்லிம் பெண்கள் படிக்கவில்லை, இல்லையா? ஏன்? அவர்களுக்கு 18 வயது ஆகும்போதே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். நம்மைப் பற்றி என்ன? 28-30 வயது வரை அவர்களை திருமணம் செய்யாமல் வைத்திருக்கிறோம். அவர்களின் சம்பாத்தியத்தில் இருந்து நமக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்று நினைக்கிறோம். அதுதான் பிரச்சினை” எனத் தெரிவித்தார். கிறிஸ்தவப் பெண்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில், பிற்போக்குத்தனமான மற்றும் ஆணாதிக்கக் கருத்துக்களை பா.ஜ.க தலைவர் பேசியிருப்பதாக அவருக்கு எதிராக கண்டனக் குரல் வந்து கொண்டிருக்கிறது.