தமிழ்நாடு வாகனப்பதிவு எண்ணைப் போலியாக வைத்து கேரளாவிற்கு 17 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்தவிருந்த கேரளா கனரக வாகனத்தை நள்ளிரவில் வளைத்துப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் வடுகச்சேரி கிராம மக்கள்.
அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவுதிட்டத்தைப்போல விளிம்புநிலை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்துவருகிறது ரேசன் அரிசி. அந்தவகையில் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஏற்றிவரப்பட்ட அரிசி மூட்டைகளை, நாகை அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தில் இருக்கும் நியாயவிலைக் கடைக்கு முன்பு வைத்து மற்றொரு வாகனத்தில் மாற்றியுள்ளனர். அப்போது அந்தவழியாக வீட்டிற்கு வந்த ஊராட்சிமன்றத் தலைவர் உள்ளிட்ட சிலரின் கண்களில் அதுபட, சற்று நேரம் கூர்ந்து கவனித்துவிட்டு, கிராம மக்களுக்குத் தகவலைக் கொடுத்துவிட்டு, அந்த நபர்களிடம், “இந்த இரவு நேரத்தில் என்ன செய்றீங்க” என கேட்டிருக்கிறார்.
சுதாரித்துக்கொண்ட கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிக்க வாகனத்தை மோதுவது போல் வந்துள்ளனர். அதற்குள் அங்கு பொதுமக்கள் கூடிவிட இருசக்கர வாகனங்களை லாரி முன்பு நிறுத்தி கடத்தல் வாகனத்தை சிறைபிடித்தனர். அதன்பிறகு வட்டாட்சியர், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள வியாபாரி தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ள மோட்டா ரக அரிசியை வாகனத்தில் எடுத்துவர அனுப்பியுள்ளதாகவும், வடுகச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில் அரிசி மூட்டைகளை ஏற்றியதாகவும் கடத்தல் லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.
பின்னர் லாரியை சோதனையிட்டபோது, கேரளா பதிவு கொண்ட நம்பர் பிளேட்டும், அதன்மேல் தமிழ்நாடு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும் இருந்ததைக் கண்டுபிடித்தனர். கேரளாவுக்குக் கடத்த இருந்த 350 மூட்டைகளில் சுமார் 17,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து, ஓட்டுநர் உட்பட கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணைக்காக வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.