அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ந்தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பள்ளிகள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு தனது அதிகாரங்கள் அத்தனையும் பயன்படுத்தி வருகின்றன. திமுக உட்பட எதிர்கட்சிகள், ஆசிரியர் அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. அரசோ, நிறைவேற்ற முடியாத கோரிக்கையை வைக்கிறார்கள் என்கிறார்கள்.
இந்நிலையில் 28ந்தேதி முதல் தீவிரமாக போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கூறி அதன்படி இன்று போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் அரசு பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் திரும்ப வீட்டுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் இன்று போராட்டத்துக்கு சென்றதால் பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். பள்ளிக்கு வந்த மாணவ – மாணவிகள் இதனால் என்ன செய்வது எனத்தெரியாமல் தடுமாறினர். பள்ளி வாசலிலேயே அமர்ந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிலர், உடனே பள்ளியை திறக்க வேண்டும், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.