Skip to main content

விபத்தில் சிக்கிய லாரிகளில் ரேஷன் அரிசி... அதிகாரிகள் அதிர்ச்சி...!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதி சாலையை கடக்க முயன்ற லாரி மீது கார் மற்றும் அரசு பேருந்து மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுக்கா போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Ration rice confiscation in tiruppattur

 



விபத்தில் சிக்கிய லாரி மற்றும் உடன் வந்த லாரியில் ரேஷன் அரிசி இருந்ததால் அக்கிராம மக்கள் ஆம்பூர் வட்டாசியருக்கு தகவல் தெரிவித்தனர். வட்டாட்சியர் செண்பகவள்ளி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 2 லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் ரேஷன் அரிசியுடன் லாரிகளை பறிமுதல் செய்து எடுத்து செல்ல முயன்றனர். இது விபத்து வழக்கு லாரிகளை நீங்கள் பறிமுதல் செய்ய ஒப்புக்கொள்ள முடியாது என வட்டாட்சியர் செண்பகவள்ளியிடம் ஆம்பூர் கிராமிய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தகவல் சொன்னார். இதில் ரேஷன் அரிசி உள்ளது, அதற்காகத்தான் பறிமுதல் எனச்சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் முத்தமிழ்ச் செல்வன் இருவரும் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். ரேஷன் அரிசி ஏற்றி வந்த 2 லாரிகளை காவல்துறை கையகப்படுத்தும், விபத்து வழக்கை ஆம்பூர் போலீசும், அரிசி கடத்தல் வழக்கை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை நடத்தும் எனச்சொல்லினர். அதன்பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். 

இரண்டு லாரிகளில் இருந்து சுமார்  50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுனர்கள் 2 பேர் கைது செய்து  தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்