கண் கருவிழி ஸ்கேனிங் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இந்நடைமுறை பயன்பாட்டிற்கு வரும் என தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது 23 இடங்களில் திறந்தவெளியில் நெல் சேமிப்பு கிடங்குகள் இருந்தது. அதெல்லாம் இன்றைக்கு இருக்கக் கூடாது, ஒரு நெல்மணி கூட மழையால் நனையக் கூடாது என்பதற்காக 738 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் நெல்லை சேமித்து வைப்பதற்கான குடோன் கட்டுவதற்கு அனுமதி தந்து முதற்கட்டமாக 106 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் சொந்தக் கட்டடம் இல்லாமல் இருக்கின்றன. அதற்கும் தலா 60 லட்ச ரூபாய் வீதம் சுமார் 80 இடங்களில் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நபார்டு வங்கியின் மூலமாக 50 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு, அந்தப் பணியையும் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம். நிறைய இடங்களில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கொடுக்கிறார்கள். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைரேகை அழிந்தவர்கள் ஆகியோர் தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவர் வந்தாலும் அந்தப் பொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்கனவே பலமுறை பேசியிருக்கிறேன்.
யாருக்கு அந்தப் பொருட்களைக் கொடுக்கலாம் என்று அந்த நபர் பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் முடிவு செய்து அவர்களிடம் அந்தப் பொருட்களைக் கொடுக்க முடிவு செய்யலாம். அதைவிட மேலாக, பயோமெட்ரிக் மட்டுமல்லாது, கண் கருவிழி ஸ்கேனிங் மூலமாக ரேஷன் பொருட்களைப் பெறும் நடைமுறை ஏற்கனவே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நகரப் பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிரண்டு ஊரகப் பகுதிகளிலும் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் 35,000 நியாய விலை கடைகளிலும் கண் கருவிழி ஸ்கேனிங் மூலம் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்'' என்றார்.