சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
சனாதன விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில் அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது தரப்பில் வாதங்களை வைத்து வருகின்றனர். அந்த வகையில், திமுக துணைச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர், “அரசியல் அமைப்பு சட்டத்தில் மதத்துக்கு வழங்கப்பட்ட உரிமையை விட கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மத உரிமை என்பது பேச்சுரிமைக்கு கட்டுப்பட்டதுதான். தீண்டாமை கொடுமை ஒழிக்கப்படுவதற்கு சட்டங்கள் வந்தாலும் அவை எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டதா? அதனால்தான் நசுக்கப்பட்ட மக்களுக்காக சனாதன ஒழிப்பு கருத்தை ஆ. ராசா முன்வைத்துள்ளார்.
பெரியார், அண்ணா, கலைஞர் போலவே ஆ. ராசாவும் சனாதனத்தையும், சனாதன கொடுமையையும் நன்றாக படித்து தெளிவு அடைந்த பின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். எனவே, திராவிட தலைவர்கள் ஒரு விஷயத்தை எதிர்ப்பதற்கு முன்பு அது குறித்து தெரிந்து கொண்டுதான் பேசுவார்கள். அதனால், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆதரவாகத்தான் ஆ. ராசா பேசியுள்ளார்” என்று கூறினார்.