ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றது. தமிழ்நாடு மட்டும்மல்லாமல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். மலை உச்சியில் அமைந்துள்ள நரசிம்மர் கோவிலுக்கு செல்ல சுமார் ஆயிரம் படிக்கட்டுகள் ஏறி மேலே செல்ல வேண்டும். இதனால் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் என்கிற கம்பிவட ஊர்தி அமைக்கப்பட வேண்டும் என்பது இக்கோவில் பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கை.
ரோப் கார் திட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முடியாமல் தொய்வாகவே இருந்து வந்தது. 2021 மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு கவனம் எடுத்தார். மீண்டும் பணிகள் தொடங்கியது, வேகவேகமாக பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் ஏப்ரல் 14(இன்று) ஆம் தேதி கம்பிவட ஊர்தி பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் சோதனை ஓட்டத்தில் கலந்து கொண்டு மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு சென்று வந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விரைவில் இந்த திட்டத்தை பொதுமக்கள் பயணம் செய்வதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார் என்றார். பக்தர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.