ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கூட்டம் தொடங்கிய முதலே ராணிப்பேட்டை நகராட்சி தமிழகத்தில் சிறந்த மூன்றாவது நகராட்சியாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புக்கு எதிராக அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
எந்த அடிப்படை வசதியும் நிறைவேற்றாத இந்த நகராட்சி சிறந்த நகராட்சியா என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளைக் குறித்து அடுக்கடுக்காக பட்டியலிட்டு இதை எப்போது தீர்வு காண்பீர்கள் எனக் கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது எனத்தெரியாமல் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் தடுமாறினர்.
பின்பு அவர், “எனக்குப் பதில் எனது கணவரும், கவுன்சிலருமான வினோத் பதில் அளிப்பார்..” என்று சுஜாதா கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக நகர மன்ற தலைவர் சுஜாதாவின் கணவரும் நகராட்சியின் வார்டு உறுப்பினருமான வினோத் உட்பட திமுக கட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் இணைந்து அதிமுக வார்டு உறுப்பினர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“நாங்கள் கேள்வி கேட்டால் சேர்மன் தான் பதில் அளிக்க வேண்டும், நீங்கள் யார் பதில் சொல்வதற்கு. இது நகராட்சியா இல்லை உங்கள் வீடா?” என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதன் காரணமாக நகர மன்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு இரு தரப்பினரும் இரண்டு கட்சியின் செயல்பாடுகளைக் குறித்து விமர்சித்தனர். மாவட்டத்தில் கட்சியை வழிநடத்தும் நபர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.