வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 35வது மாவட்டமாக உருவாகியுள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின் தொடக்க விழா நவம்பர் 28ந்தேதி நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்டம் அறிவிக்கப்பட்டதுமே, அதனை மாற்றி அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டத்தை அறிவிக்க வேண்டும், அது தான் புவியல் ரீதியாக சரியானதாக அமையும் என வேண்டுக்கோள் விடுத்து அரக்கோணம் நகரம் மற்றும் தாலுக்கா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அரசாங்கம் இராணிப்பேட்டை மாவட்டம் தான் என்பதில் உறுதியாக இருந்துவிட்டது.
வேலூர் மாவட்டமாக இருந்தபோது, அரக்கோணத்தில் இருந்து வேலூர் வர இரண்டு பேருந்துகள் மாறி வரவேண்டும், தற்போது இராணிப்பேட்டை என அறிவித்தபோதும் அதே நிலை தான். அரக்கோணத்தில் என்ன வசதியில்லை ?. எங்கள் பகுதியை தலைமையாக கொண்டு ஏன் மாவட்டமாக அறிவிக்கவில்லை என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர் அரக்கோணம் பகுதியினர்.
இந்நிலையில் நவம்பர் 28ந்தேதி அரக்கோணம் மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசாங்கத்துக்கு, அரக்கோணம் மக்களின் கறுப்பு தினம் இன்று என போஸ்டர் அடித்து மாவட்டத்தின் பல பகுதிகளில் ஓட்டி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.