ஏ.டி.எம். இயந்திரங்களில் பணத்தை நிரப்புவதற்காக சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதாகவும், அதிலிருந்து ரூ.1.60கோடி மாயமானதாகவும் புகார் அளிக்கப்பட, போலீசாரின் விசாரணையில் ஊழியர்களே பணத்தைக் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சாயல்குடியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் பணத்தை நிரப்பிவிட்டு, முதுகுளத்தூரிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு ரூ.1.60 கோடியுடன் ஓட்டுநர், ஆயுதம் ஏந்திய காவலர் மற்றும் வங்கி பணியாளர்கள் என மொத்தமாக 4 பேர் சென்ற வாகனம் கடலாடி மலட்டாறு பகுதியில் விபத்துக்குள்ளனதாகவும், அதிலிருந்த அனைத்து ரூபாய்களும் மாயமானதாக சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வாகனத்திலிருந்த நால்வரையும் தனித்தனியாக விசாரிக்க முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்ததால் சந்தேகமடைந்து தீவிரமாக விசாரித்துள்ளனர்.
இவ்விசாரணையில் வாகனத்தின் மேலாளர் குருபாண்டி ஓட்டுனர் அன்பு ஆகிய இருவரும் திட்டமிட்டு உடன் வந்த ஊழியர்கள் கபிலன் மற்றும் வீரபாண்டி ஆகியோரையும் கூட்டுச்சேர்த்து, திட்டமிட்டு பணத்தை இவர்களே கீழக்கரையில் உள்ள இவர்களின் கூட்டாளிகளிடம் கொடுத்து வைத்துள்ளதாக ஒத்துக்கொண்டனர். மேலும் இவர்களிடமிருந்து இதுவரை ரூ,36 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக்கொள்ளையில் இவர்களுக்கு உதவியாக இருந்த ராமநாதபுரம் கீழக்கரை மற்றும் மதுரையைச்சேர்ந்த சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கண்டிபிடுத்துள்ளதால் போலீசாருக்குப் பாரட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது.