Skip to main content

பட்டாசு வெடித்த விபத்தில் சிறுமி பலி; முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

ranipet district 4yrs old child incident cm relief announcement

 

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் நவிஷ்கா (வயது 4) என்ற சிறுமிக்கு பட்டாசு வெடித்தபோது நேற்று எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் ரமேஷ் என்பவரின் மகள் நவிஷ்கா (வயது 4) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்