
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தாயார் காலையில் உயிரிழந்த நிலையில் அந்த சோகத்தை மறைத்துக் கொண்டு, சுனில் குமார் என்ற மாணவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றுள்ளார்.
இதய நோயால் உயிரிழந்த தாய் சுபலட்சுமியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு காலில் விழுந்து ஆசி பெற்று சுனில்குமார், தேர்வு எழுத செல்லும் அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்வு எழுதிவிட்டு மாலை இறுதிச் சடங்கில் மாணவர் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சியாக பதிவு ஒற்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்' மாணவர் சுனில்குமாரிடம் பேசினோம். மாணவரின் சகோதரனாக துன்பத்தை பகிர்ந்துகொண்டு “தைரியமுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். எப்போதும் துணை நிற்போம்” என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தியையும் தெரிவித்தோம். சுனில்குமார் கல்வியின் மூலம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும். அம்மாவின் பெரும் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.