விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் ராஜ்(21). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு ரகசியமாகக் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்படி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தம் தலைமையிலான போலீசார் நேற்று காரப்பட்டு கிராமத்துக்குச் சென்று திடீரென்று விக்னேஷ் ராஜ் வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு அவர், கஞ்சாவை பதுக்கி வைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், கஞ்சா போதைக்கு அடிமையான நபர்களுக்கும் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், விக்னேஷ் ராஜை கைது செய்தனர். மேலும், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுக்கா திருவதிகையைச் சேர்ந்த ஷேக் அசீம்(21), பெரிய காட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நபி(21), சித்தாநந்தூர் ரகுபதி(21), இவர்களுடன் 17 வயது சிறுவன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று இரு சக்கர வாகனங்கள், ஏழு செல்போன்கள் மற்றும் கஞ்சா பொட்டலம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அங்கு அவர்கள் மீது இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறுவனை தவிர்த்து ஐந்து பேரை சிறையிலும், 17 வயது சிறுவனை விழுப்புரத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் கொண்டு சென்று அடைத்தனர்.