ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு ராமநாதபுரத்தில் ரூபாய் 345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மருத்துவக் கல்லூரி 22.6 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவோம். ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ மாணவர் இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது. நாட்டின் முன்னோடி மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு. பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழக மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள். ராமநாதபுர மாவட்டத்திற்கு சுகாதாரத்துறையில் 10 அறிவிப்புகள் நிறைவேற்றம். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது. மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்டு இயங்கும் மாநிலம் தமிழகம். அரசுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். மக்களிடையே யார் பிளவை ஏற்படுத்த விரும்பினாலும் அது முறியடிக்கப்படும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.