ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுகள் மூலம் இவ்வூர், 2,400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாகவும், வணிக மையமாகவும் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அழகன்குளத்தில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காசுகள் மூலம் இவ்வூரின் வெளிநாட்டு வணிகத் தொடர்பு சமீபகாலம் வரை இருந்துள்ளதை நிரூபிக்கிறது.
அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் அசோகனின் முன்னோர்கள் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகம் செய்தவர்கள். அவர் பூர்வீக வீட்டின் பழமையான பெட்டிகளைச் சுத்தம் செய்தபோது அதில் ஒரு பெட்டியில் பழைய நாணயங்கள் இருந்துள்ளன. இதில் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த ஈழக்காசு, இந்தியா, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்புக்காசுகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக்காசு ஆகியவை இதில் முக்கியமானவை.
ஈழக்காசு:
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இக்காசுகள் பற்றிக் கூறியதாவது, "இங்கு கிடைத்த ஈழக்காசு முதலாம் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிட்ட காசு ஆகும். இக்காசு தேய்ந்த நிலையில் உள்ளது. ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன.
திருவிதாங்கூர் பணம்:
திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக்காசின் ஒருபுறம் சங்கும், மறுபுறம் பணம் ஒன் என மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் 1096 எனும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இது கொல்லம் ஆண்டு எனப்படும் மலையாள ஆண்டு ஆகும். இதனுடன் 825- ஐ கூட்டி தற்போதைய ஆண்டு கணக்கிடப்படுகிறது. இக்காசு மூலம் திருநாள் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1921-இல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மன்னரைக் குறிக்க ஆர்.வி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இலங்கை சதம்:
இலங்கை சதம் காசுகளில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இவை 1929 முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக்காசுகள். இதில் இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை எனும் மரத்தின் படம் உள்ளது. தற்போதும் இலங்கையின் பணத்தாள்களில் தாளிப்பனையின் படம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விக்டோரியா மகாராணி, ஐந்தாம், ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள், ஏழாம் எட்வர்டு மன்னர் 1909- இல் வெளியிட்ட கிரேட் பிரிட்டனில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயம் ஆகியவையும் இதில் உள்ளன.
பல நூற்றாண்டுகளாக அழகன்குளத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை, இங்கிலாந்து, திருவிதாங்கூர் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்துள்ளனர் என்பதை இக்காசுகள் மூலம் அறிய முடிகிறது. இதேபோல் இம்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வே.ராஜகுரு கூறினார்.