Skip to main content

திருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
saraswathy pooja


 

திருவாரூர் அருகே கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி வயது குழந்தைகளை நெல்மணிகளில் எழுதி கல்வி கணக்கை தொடங்கினர்.
 

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் கூத்தனூர் சரஸ்வதி அம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது. பழங்கால புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்ட கோயில் இதுவாகும். இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில்  இருப்பது இங்குதான். கல்வி மற்றும் கலைகளில் சிறக்க வேண்டும் என்பதற்காக நாடுமுழுவதும் இருந்து பலரும் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
 

அந்த வகையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தினத்தை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜைக்கு  இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் தாமரை மலர்களுடன் வந்து தங்களது நோட்டு, புத்தகம் மற்றும் எழுதுகோல் வைத்து வழிபட்டனர்.
 

இன்று விஜயதசமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தவண்ணம் உள்ளது. அதனை முன்னிட்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்துவந்து நெல் மற்றும் அரிசி ஆகியவைகளில் எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுத்து எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்து வழிபட்டனர்.
 

அதன் பின்னர் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். சிலர் பள்ளியில் சேர்த்த தங்களது சிறு குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துவந்து சன்னதியில் அமரவைத்து எழுத்துக்களை எழுதவைத்தும், பாடங்களை படிக்க வைத்தும் அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்