பா. ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார். வெளிமாநிலங்களில் தான் முன்பு வளர்ச்சி திட்டங்கள் வரும் போது நக்சல்கள் ஊடுருவி தடுப்பார்கள். இப்போது தமிழகத்திலும் அது நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது நக்சல்கள் ஊடுருவலை தடுத்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக அரசு நக்சல்கள் ஊடுருவலை தடுப்பதில் தோல்வியடைந்து விட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீயசக்திகள் வன்முறையில் ஈடுபட்டது போல ஸ்டெர்லைட் போராட்டத்திலும் நடத்தினார்கள். இந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட முதலில் உண்ணாவிரதம் இருந்தது தற்போதைய மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தான். ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்காக போராடியவர்கள் இன்று இரட்டை வேடம் போடுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கடந்த 40 வருடங்களாக காங்கிரசும், தி.மு.க.வும் கூறி வந்தனர். ஆனால் இன்று பா.ஜனதா அரசு 50 நாளில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.