Skip to main content

கொடைக்கானல் பள்ளி மாணவன் கொலையில் வெளிவராத மர்மங்கள்!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு அருகே செயல்பட்டு வரும் பாரதிய வித்யா பவன்'ஸ் காந்தி வித்தியாஸ்ரம் என்ற தனியார் பள்ளியில் படித்து வந்த கபில்ராகவேந்திரா என்ற மாணவனை உடன் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவன் கிரிக்கெட் மட்டையால் அடித்து, கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் இன்னும் பல மர்மங்கள் வெளிவராமல் உள்ளது.   

 

 Mysteries not revealed in Kodaikanal school student's incident

 

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து கொலை செய்த மாணவன் ஸ்ரீஹரியை கைது செய்து சேலம் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். பலியான மாணவன் கபில் ராகவேந்திரன் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலையில் ஈடுபட்ட மாணவர் மீது ஏற்கனவே பல மாணவர்கள் புகார் தெரிவித்து இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தீய பழக்கவழக்கங்கள் கொண்டிருந்த அந்த மாணவன் ஆசிரியர்களையும் மரியாதை குறைவாக பேசும் பழக்கமும் உடையவன். அவனது மற்ற பழக்கவழக்கங்கள் என்ன என்பது அவனுடன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம். கொலை செய்யப்பட்ட கபில் ராகவேந்திராவும், ஸ்ரீஹரியும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். விடுதியில் தங்கியிருந்தபோது அவரது நடவடிக்கை பிடிக்காததால் கபில் ராகவேந்திரா அந்த மாணவனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளான்.

சம்பவம் நடந்த அன்று மாலையில் இருவரும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அதன்பிறகு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இரவு 8 மணிவரை அங்கு இருந்த மாணவர் கபில் ராகவேந்தரை அந்த மாணவர் கொலை செய்துள்ளார். அங்குள்ள கழிப்பிடம் அருகே கபில் ராகவேந்திரா பிணமாக கிடந்தார். அந்த கழிப்பிடம் மாணவர்கள் விளையாடும் சமயத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பகுதி ஆகும். இதனால் மாலை பள்ளி முடிந்து விடுதிக்கு சென்ற மாணவர்கள் இங்கு வரவில்லை. இரவு 8 மணிக்கு சாப்பிடச் செல்லும்போது அனைத்து மாணவர்களும் வந்துவிட்டார்களா என்பதை விடுதிக்காப்பாளரும் கவனிக்கவில்லை. மேலும் இரவு 11 மணி வரை இரண்டு பேரும் தூங்குவதற்கும் வரவில்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. 

 

 Mysteries not revealed in Kodaikanal school student's incident

 

கொலை செய்துவிட்டு அந்த மாணவர் பள்ளி காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வெளியேறினான். பின்னர் கொடைக்கானல் விளக்குப் பகுதியில் சுற்றிக் திரிந்த அவன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளான். ஆனால் ஏரி அருகே இரவு 11 மணிக்கு ஸ்ரீஹரி அங்கிருந்த ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்க நினைக்க பள்ளி சீருடையில் இரவு 11 மணிக்கு தனியாக வந்த மாணவன் அறை எடுத்து தங்க வேண்டும் என கூறியதால் சந்தேகம் அடைந்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 Mysteries not revealed in Kodaikanal school student's incident

 

அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்திய போதுதான் கபில் ராகவேந்திராவை கொலை செய்யப்பட்ட விவரமே தெரிய வந்தது. மாணவர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் அவர்கள் முறையாக விடுதிக்கு வருவார்களா சாப்பிட்ட பின் தங்கள் அறையில் வந்து தங்குகிறார்களா என்பதையும் கண்காணிப்பதில்லை. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற தனியார் பள்ளி பள்ளிகள் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. 

விடுதியில் அஜாக்கிரதையாக இருந்த காப்பாளர் உள்பட பணியாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி கபில் ராகவேந்திரா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதற்கான உண்மையான விவரத்தை அவரது பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசாரின் கடமை  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்