தேர்தல் தேதி அறிவித்துவிட்டதால் செய்தி சேகரிப்பதற்காக தொடர்ந்து பலதரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தொகுதியில் யாருக்கு சீட்டு கொடுத்தால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்று தொகுதி நிலவரங்களை பற்றி கேட்டு கொண்டு இருக்கும்போது தொடர்ந்து நம் செல்லில் மிஸ்டு கால் வரவே உடனே அந்த நம்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கன்னிவாடி குடிகாரர்கள் சங்கத்திலிருந்து பேசுகிறோம் சார். அரசியல் கட்சிகள் எல்லாம் வாக்காளர்களுக்கு தேர்தல் அறிக்கை விட இருக்கிறார்கள். இந்த அரசியல் கட்சிகளுக்கெல்லாம் எங்கள் சங்கத்திலிருந்து ஒரு கோரிக்கை வைக்க இருக்கிறோம். அதற்காக செயற்குழு கூட்டம் வழக்கம்போல் பழைய ஒயின் ஷாப் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் நடக்க இருக்கிறது. நீங்கள் அவசியம் கலந்து கொண்டு குடிமகன்களின் கோரிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே செல் லைனும் கட்டாகி விட்டது.
அதைத்தொடர்ந்து சங்க கூட்டம் நடைபெறும் கன்னிவாடிக்கு சென்ற நாம் அப்படி என்ன அரசியல் கட்சிகளுக்கு நீங்கள் கோரிக்கை வைக்கப் போகிறீர்கள் என்று குடிகாரர் சங்கப் பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது...
என்ன சார் இப்படி கேக்குறீங்க இதற்காகவே இந்த குவாட்டரை அடித்துவிட்டுத்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இடுப்பில் வைத்திருந்த குவாட்டரை எடுத்து இரண்டு பெக் அடித்தவாறே தேர்தல் என்று வந்துவிட்டாலே ஓட்டுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை மக்களுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள். ஆனால் எங்களைப் போல் உள்ள குடிமகன்களுக்கு 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்கக்கூடிய எம்.சி. கனிபி, கார்னிடால், மானிட்டர், ஓல்டுசெப், கோல்டு சீக்ரெட், மென்ஸ்கிளப், பின்னிங், விஎஸ்ஓபி, ராயல் பேலஸ், ராயல் அப்பாடு, ஓட்கா இப்படி வாயில் நுழையாத சரக்குகளை அரசியல் வாதிகள் கொடுத்தே ஓட்டு வாங்கிவிட்டு போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட சரக்குகளை நாங்கள் ரெகுலராகவே குடித்து வருகிறோம். அதையே தேர்தலின்போது அரசியல்வாதிகள் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.
பொதுமக்களுக்கு ஓட்டுக்கு 500 ரூபாய்க்கு மேல் கொடுக்கும்போது எங்களுக்கு விலை உயர்ந்த சரக்குகளான மார்க்சிஸ்ட் புளு, ரிசர்வ், எம்சிஎம்கோல்டு, ராயல் கோல்டு, 18க்கு48, மோல்ஸ், சிங்லூயிஸ் இப்படி போன்ற தரமான சரக்குகளை அரசியல்வாதிகள் வாங்கிக்கொடுத்தால்தான் இந்த தேர்தலில் ஓட்டு போடுவோம் என அரசியல் கட்சிகளுக்கு குடிகாரர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது என்று சொன்ன உடனே உடன் இருந்த குடிமகன்களும் டம்ளரில் இருந்த சரக்கை எடுத்து ஒரு பெக் இழுத்துவிட்டு கைதட்டி ஆரவாரம் செய்ததை கண்டு சங்க பொறுப்பாளர்கள் அந்த உறுப்பினர்களை கட்டுப்படுத்திவிட்டு இது எங்களுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த குடிமகன்களின் கோரிக்கையும் இதுதான் என்று கூறினார்கள். ஆக வரக்கூடிய இந்த பாராளுமன்ற தேர்தலில் தரமான சரக்குகளை குடிமகன்களுக்கு அரசியல்வாதிகள் வாங்கிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் குடிமகன்களும் இருந்து வருகிறார்கள்!