பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டபடுகிறது; அப்படியென்றால் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான். பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆந்திர மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இராமச்சந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும் போது, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவிருப்பதாகவும், தேர்தல் முடிவடைந்த பிறகு மேலும் இரு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார். பாலாற்றின் குறுக்கே கடந்த காலங்களில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் பாலாறு வறண்டு கிடக்கும் நிலையில், பாலாற்றில் புதிய அணை கட்டுவதென்பது பாலாற்றை பாசன ஆதாரமாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திரம் கட்ட முயல்வது தொடர்பான சர்ச்சை 18 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். குப்பம் பகுதியில் கணேசபுரம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சிகளில் குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் இருந்த சந்திரபாபு நாயுடு 2006 இல் முயன்ற போது, அதைக் கண்டித்து முதல் குரலை எழுப்பியதும், போராட்டங்களை நடத்தியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். அப்போதைய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆந்திர எல்லைக்கே சென்று தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் வரை சென்று பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக் கூடாது.
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்ட ஆந்திர அரசு, அம்மாநிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் 22 தடுப்பணைகளில் பெரும்பாலானவற்றின் உயரங்களை அதிகரித்து விட்டது. அதனால், ஆந்திரத்தில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் தவிர தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வருவதில்லை. அதனால், ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும்.
பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” குறிப்பிடப்பட்டுள்ளது.