பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அறிக்கை: ’’கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்ள முடியும். தமிழக நலனுக்கு எதிரான இந்த அனுமதி கண்டிக்கத்தக்கது.
மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழக அரசுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் சதி ஆகும். இதற்கான முயற்சிகளில் மத்திய அரசும், கர்நாடக அரசும் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தன. கடந்த ஜூலை மாதம் முதல் இன்று வரை மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவ சங்கரும் குறைந்தது 5 முறையாவது சந்தித்துப் பேசியுள்ளனர். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் மேகதாதுவில் அணை கட்ட உரிய அனுமதிகளை பெற்றுத் தருவதாக கர்நாடக ஆட்சியாளர்களுக்கு கட்கரி வாக்குறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் தான் இப்போது மேகதாது அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது.
மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்பது சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது தான். அதற்கான சமிக்ஞைகளை மத்திய அரசு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. இதுதொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களையும் அழைத்துப் பேசப்போவதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருந்தார். அதனால் தான் இவ்விஷயத்தில் தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும் என கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 10, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கைகளை வெளியிட்டு தமிழக அரசை எச்சரித்தது. ஆனால், தமிழக அரசு உறங்கியதால் தான் இப்போது கர்நாடகத்துக்கு அணை கட்ட அனுமதி கிடைத்துள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான செயல் ஆகும். கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும்தான் காவிரியில் புதிய அணைகளைக் கட்ட முடியும் என்று இரு அமைப்புகளும் தெளிவாகக் கூறியிருந்தன. கடந்த ஆண்டு வரை மத்திய அரசின் நிலைப்பாடும் இத்தகையதாகவே இருந்து வந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்குப் பதிலளித்து 09.06.2015 அன்று உமாபாரதி எழுதிய கடிதத்தில் இதைத் தெளிவாக விளக்கியிருந்தார்.
மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது’’ என்று உமாபாரதி கூறியிருந்தார். உமாபாரதியின் நிலைப்பாட்டைத் தான் நிதின்கட்கரியும் எடுத்திருக்க வேண்டும். மேகதாது அணைக்கான வரைவு அறிக்கையுடன் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் இணைக்கப் படாத நிலையில் கர்நாடக மனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக அனுமதி அளித்தது அநீதி.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசன மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும்.
எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்கும் வரை காத்திராமல் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும்.’’