கரோனா பரவிவரும் நிலையில் ரமலான் நோன்பு குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன், தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சண்முகம் பேசுகையில்,
வருகின்ற 23, 24 ஆகிய நாட்களில் ரமலான் நோன்பு தொடங்குகிறது. மாநில அரசைப் பொருத்தவரைக்கும் 5,450 மெட்ரிக் டன் அரிசி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை பயன்படுத்தி பள்ளிவாசல்களில் ஆண்டுதோறும் கஞ்சி காய்ச்சி நோன்பு இருப்பவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு இந்த கரோனா வியாதியைத் தடுப்பதற்காக ஊரடங்கு போட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த அரிசியை எப்படி வழங்குவது, இதை பள்ளிவாசல்கள் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்லாம் சமயத்தைச் சார்ந்த பல்வேறு அமைப்புகளுடைய கருத்துக்களை எல்லாம் கேட்டோம். இன்று பல்வேறு இஸ்லாமிய பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் தங்களது கருத்துகளை கூறினர்.
இதுகுறித்து பல்வேறு மாற்று வழிமுறைகளை நாங்கள் முடிவு செய்தோம். அதாவது பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படுகின்ற அரிசி நேரடியாக 19 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும், அதை தகுதியான குடும்பங்களுக்கு சிறு,சிறு பைகளில் பிரித்து மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அந்தந்த குடும்பங்கள் இருக்கின்ற வீடுகளுக்கு வழங்கவேண்டும் என்று சமயத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடம் எடுத்துக் கூறினோம். ஆனால் அவர்கள் கஞ்சி தயாரித்து, நாங்கள் வழங்குகிறோம் என்று அவர்களது கருத்தை கூறினார்கள்.
அப்படி செய்தால் அதனால் ஏற்படும் இடர்பாடுகளை எடுத்துக் கூறினோம். அதை தவிர்க்க கேட்டுக்கொண்டு அரிசி வீடுகளுக்கு வழங்கலாம் என நாங்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், வழிபாடுகள் சமய கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே வரும் 19ம் தேதிக்குள் இந்த பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட இருக்கக்கூடிய அரிசி, 22ஆம் தேதிக்குள் பிரித்து வீடுகளுக்கு சிறு பைகளில் வழங்கப்படும் என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். இந்த முடிவை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என்றார்.