ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற விவகாரங்களில் குடியரசுத் தலைவர் சம்மந்தப்பட்ட அமைச்சங்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே முடிவை எடுப்பார். இந்த விவகாரத்தில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழக அரசின் மனுவை நிராகரித்த குடியரசு தலைவர், மாநில அரசின் கோரிக்கையோடு மத்திய அரசு ஒத்துப் போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 4 மாதங்களில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனாலும், இரண்டும் உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.