திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி மன்ற மாவட்ட செயலாளராக தம்புராஜ் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த மணிமாறன் இறந்த பிறகு முன்னாள் மாநில தலைவர் சத்திய நாராயணுடன் ஒரு நெருக்கத்தை வைத்து கொண்டு தான் மாவட்ட செயலாளர் பதவியை வாங்கினார்.
அதன்பின், தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கி கொண்டு தனிச்சையாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் தான் ரஜனி அரசியலில் குதித்து மக்கள் மன்றம் தொடங்கியவுடனே தனக்கு வேண்டப்பட்ட ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து வளர்த்து கொண்டு, ஆரம்ப காலத்திலிருந்து வந்த ரஜினி ரசிகர்களுக்கு பொறுப்பு கொடுக்காமல் ஓரம் கட்டியே வந்தார்.
இதனால், ரஜினி ரசிகர்கள் மத்தியில் தம்புராஜ் மேல் பெரும் அதிருப்தி ஏற்பட்டு வந்தது. அதோடு தம்புராஜின் தனிச்சையான செயல்பாடுகளை பற்றி மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் தலைமை வரை தொடந்து புகார் அனுப்பி வந்தனர். இந்தநிலையில் தம்புராஜை திடீரென தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ததுடன் மட்டும்மல்லாமல் அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மன்ற உறுப்பினர்கள் எந்த ஒரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதுபோல், அவருடைய மாவட்ட செயலாளர் பதவியை, மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் கூடுதலாக கவனிப்பார் என மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகியான வி.எம்.சுதாகர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இத்தகவலை மாவட்ட தலைவர் எஸ்.டி.பாணிக்கு தெரியப்படுத்தி மக்கள் மன்றம் லெட்டர் பேடு மூலமும் எழுதி கையெழுத்து போட்டும் வி.எம்.சுதாகர் அனுப்பியுள்ளார்.
இந்த நகல் ஜெராக்ஸ்சை மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றம் ரசிகர்களுக்கும் அனுப்பி தம்புராஜூடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தம்புராஜ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இருந்தாலும் மற்றொரு புரம் ரஜினி ரசிகர்கள் தம்புராஜை பதவியிலிருந்து தூக்கி அடித்ததை கண்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.
Published on 23/03/2018 | Edited on 23/03/2018