சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மார்ச் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட வேட்புமனு தாக்கல், 19ஆம் தேதி முடிவடைந்தது.
வேட்புமனுக்கள் அனைத்தும் மார்ச் 20ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள், மாற்று வேட்பாளர்கள் ஆகியோர் மார்ச் 22ஆம் தேதி தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 207 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் விவரம்:
கெங்கவல்லி (தனி):
கெங்கவல்லி தனி தொகுதியில் அதிமுக தரப்பில் நல்லதம்பி, திமுக சார்பில் ரேகா பிரியதர்ஷினி, அமமுக சார்பில் பாண்டியன், ஐஜேக கட்சி சார்பில் பெரியசாமி, நாம் தமிழர் கட்சி (நாதக) சார்பில் வினோதினி உட்பட மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர்.
ஆத்தூர் (தனி):
ஆத்தூர் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் கு.சின்னதுரை, அதிமுக சார்பில் ஜெயசங்கரன், அமமுக சார்பில் மாதேஸ்வரன், நாதக வேட்பாளர் கிருஷ்ணவேணி, சமத்துவ மக்கள் கட்சி (சமக) வேட்பாளர் சிவக்குமார் மற்றும் சுயேச்சைகள் உட்பட 11 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
ஏற்காடு (தனி):
பழங்குடியின தனி தொகுதியான ஏற்காட்டில் அதிமுக வேட்பாளர் கு.சித்ரா, திமுக சார்பில் தமிழ்செல்வன், தேமுதிக சார்பில் குமார், ஐஜேகே வேட்பாளர் துரைசாமி, நாதக சார்பில் ஜோதி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 13 பேர் களத்தில் உள்ளனர்.
ஓமலூர்:
அதிமுக தரப்பில் வழக்கறிஞர் ஆர்.மணி, காங்கிரஸ் சார்பில் மோகன் குமாரமங்கலம், மக்கள் நீதி மய்யம் (மநீம) வேட்பாளர் சீனிவாசன், அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன், நாதக வேட்பாளர் ராஜா மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
மேட்டூர்:
மேட்டூர் தொகுதியில் பாமக சார்பில் சதாசிவம், திமுக சார்பில் ஸ்ரீனிவாசபெருமாள், தேமுதிக வேட்பாளர் ரமேஷ் அரவிந்த், நாதக வேட்பாளர் மணிகண்டன், மநீம வேட்பாளர் அனுசுயா மற்றும் சுயேச்சைகள் உட்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
எடப்பாடி:
எடப்பாடி தொகுதியில் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பில் சம்பத்குமார், மநீம வேட்பாளர் தாசப்பராஜ், நாதக வேட்பாளர் ஸ்ரீரத்னா, அமமுக வேட்பாளர் பூக்கடை சேகர் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.
சங்ககிரி:
சங்ககிரி தொகுதியில் அதிமுக சார்பில் சுந்தரராஜன், திமுகவில் கே.எம்.ராஜேஷ், மநீம வேட்பாளர் செங்கோடன், அமமுக வேட்பாளர் செல்லமுத்து, நாதக வேட்பாளர் ஷோபனா மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
சேலம் மேற்கு:
சேலம் மேற்கு தொகுதியில் பாமக சார்பில் அருள், திமுக தரப்பில் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், நாதக வேட்பாளர் நாகம்மாள், மநீம வேட்பாளர் தியாகராஜன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.
சேலம் வடக்கு:
சேலம் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ வழக்கறிஞர் ராஜேந்திரன், அதிமுக சார்பில் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், நாதக வேட்பாளர் இமயஈஸ்வரன், மநீம வேட்பாளர் குரு சக்ரவர்த்தி, அமமுக வேட்பாளர் நடராஜன் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 20 பேர் சேலம் வடக்கில் களம் காண்கின்றனர்.
சேலம் தெற்கு:
சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக தரப்பில் இ.பாலசுப்ரமணியன், திமுக சார்பில் ஏ.எஸ்.சரவணன், மநீம சார்பில் பிரபு மணிகண்டன், நாதக சார்பில் மாரியம்மா, அமமுக சார்பில் செ.வெங்கடாசலம் மற்றும் சுயேச்சைகள் உட்பட 27 பேர் போட்டியிடுகின்றனர்.
வீரபாண்டி:
வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் தருண், அதிமுக தரப்பில் ராஜமுத்து, அமமுக சார்பில் எஸ்.கே.செல்வம், நாதக வேட்பாளர் ராஜேஷ்குமார், ஐஜேகே வேட்பாளர் அமுதா மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 20 பேர் களத்தில் உள்ளனர்.
5 முனை போட்டி:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போகு கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, ஓவைசி கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமையில் சரத்குமாரின் சமக, பாரி வேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
அனைத்து தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவினாலும் அதிமுக, திமுக கூட்டணிகளிடையேதான் நேரடி போட்டி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.