தமிழக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்தார். அப்போது டி.ஜி.பி, பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி..ஜி.பி. ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீசார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த 2021 ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
‘ரூ. 20,500 அபராதம்; மூன்றாண்டு சிறை’ - ராஜேஷ் தாஸ் தண்டனை விவரம்
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டார்.
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர்கள் மாவட்ட நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் எனும் சட்ட விதிப்படி, உடனடியாக ராஜேஷ் தாஸ் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். அப்படி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் கைது செய்யலாம்’ எனத் தெரிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.